Wednesday 28 September 2011

இன்னும் ஒரு நீதிக்கதை

ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அந்தக் குடும்பத் தலைவர் மரணப் படுக்கையில் கிடக்கிறார். தனக்குப் பிறகு தன்னுடைய பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். அதை நேரடியாகச் சொன்னால் அதன் மகத்துவமும் பெருமையும் புரியாமல் போகலாம் என்று நினைத்து ஒரு சம்பவத்தின் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்த முடிவு செய்தார். நான்கு மகன்களையும் அருகே அழைத்தார். கடைசிப் பிள்ளையைப் பார்த்து கொல்லைப்புறம் கிடக்கின்ற காய்ந்த மரக்குச்சி ஒன்றை எடுத்து வரச் சொன்னார்.
அவனும் அதை எடுத்து வந்தான். அந்தப் பெயரியவர் குச்சியை இரண்டாக முறிக்கும்படி இளையவனிடம் சொன்னார். உடனே இளைய பையன் எந்த வித சிரமமும் இல்லாமல் அந்தக் குச்சியை இரண்டாக உடைத்து தூர எறிந்தான். பெரியவர் முகத்தில் புன்னகை இழையோடியது. பிறகு நான்கு குச்சிகளை எடுத்து வரும்படி கூறினார். அந்தக் குச்சிகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு கயிற்றால் கட்டச் சொன்னார். பையனும் அதே போல் கட்டினான். இப்போது முறிக்கச் சொன்னார்.
பையன் முயன்று பார்த்தான் முடியவில்லை. அடுத்தவனைப் பார்த்தார். அவனாலும் முடியவில்லை. இப்படியாக மூத்தவன் வரை முயன்று பார்த்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இப்போது பிள்ளைகளை பாசத்தோடு நோக்கி ஓபார்த்தீர்களா, தனியாக இருந்த குச்சியை இளையவன் மிகச் சுலபமாக ஒடித்து விட்டான். ஆனால், நான்கு குச்சிகள் இணைந்த கட்டை உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதுதான் வாழ்க்கையின் தத்துவம். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தனித் தனியாகப் பிரிந்து விட்டால் ஓர் எளிய நபர்கூட உங்களை வீழ்த்திவிட முடியும். உறுதியான உள்ளமும் ஒற்றுமை உணர்வும் அமைந்து விட்டால் யாராலும் உங்களை வெல்ல முடியாது என்று கூறினார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணக் கதையாகத் தோன்றும். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அதற்குள் ஒளிந்திருக்கின்ற உண்மையும் உயர்ந்த தத்துவமும் புரியும். அதேநேரத்தில் இந்தக் கதைக்கும் நமது சமுதாயத்திற்கும் உள்ள ஒற்றுமையும் புரியும். ஒற்றுமை உணர்வைத் தொலைத்தால், வாழ்ந்த சமுதாயம் வீழ்ந்த வரலாறும் புரியும்.
ஒரே இனமாக இருந்தாலும் பண்டைய கால இந்திய அரசர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தாக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதையே பொழுதுபோக்காக கொண்டிருப்பதைப் போன்று சரித்திரங்கள் கூறுகின்றன. அதற்கு பின்னர் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு, அல்லல்பட்டு பிழைப்புத் தேடி அந்நிய நாடுகளுக்கு சென்ற போதும் இந்தப் பிரிவினை என்ற அழுக்கைச் சுமந்து கொண்டுதான் சென்றிருக்கிறார்கள் என்பதை ஆண்டாண்டு காலமாய் நடந்துவரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment